தலைப்பை மட்டும் வச்சிகிட்டு அஜித்துக்குப் படம் சொன்னாங்க… சொல்லி அஞ்சாவது மாதம் ரிலிஸ்- K S ரவிக்குமார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

By vinoth on ஆகஸ்ட் 2, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் தியேட்டர்கள் திருவிழா கோலம் கொள்கின்றன.

இப்படி வெறித்தனமான ரசிகர்கள் இருந்தும் அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய ஆயிரக் கணக்கான ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். இதற்கு அவர் சொன்ன காரணம் ரசிகர்கள் தங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். தேவையில்லாமல் என் பெயரில் அவர்கள் நேரத்தை வீணடிக்கவேண்டியதில்லை. குடும்பத்தைக் கவனித்துக் கொண்ட பிறகு நேரம் கிடைத்தால் படத்தைப் பார்த்து ரசிக்கட்டும் என்றார்.

   

இப்போது ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தாலும் அஜித், ஆரம்பத்தில் பல ரொமாண்டிக் எமோஷனல் படங்களில் நடித்துள்ளார். அவரை ஆக்‌ஷன் ஹீரோவாக்கிய முதல் படம் தீனா. ஆனால் அதன் பின்னரும் ரொமாண்டிக்கான படங்களில் அஜித் நடித்தார். அவரை முழு நேர ஆக்‌ஷன் ஹீரோவாக்கிய கே எஸ் ரவிக்குமார் இயக்கிய வில்லன் திரைப்படம்தான்.

   

அந்த படம் உருவான சுவாரஸ்யமான கதையை ரவிக்குமார் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “அப்போது நான் பரபரப்பான இயக்குனர். பஞ்ச தந்திரம் படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அப்போது தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி வந்து அஜித்துக்காக ஒரு படம் பண்ணவேண்டும் என்றார். நானும் ஓகே என்றேன். தீபாவளிக்குப் படம் ரிலீஸ் ஆகனும் என்றார்.

 

தீபாவளிக்கு இன்னும் 5 மாசம்தான் இருக்கே என்றேன். அதெல்லாம் நீங்க பண்ணிடுவீங்க என்றார். கதையிருக்கா என்று கேட்டால் அதெல்லாம் இல்லை. படத்தின் தலைப்பு மட்டும் வில்லன் என்று சொன்னார். அப்புறம்தான் கதையைப் பிடித்து திரைக்கதையாக்கி வில்லன் படத்தை எடுத்து அவர் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்தோம். படமும் சூப்பர் ஹிட் ஆனது” எனக் கூறியுள்ளார்.