CINEMA
படத்துல டைலாக்க மறந்துட்டு சரத்குமார் செய்த அலப்பறை… அவர் முன்னாடியே நடிச்சுக் காட்டி வச்சு செய்த கே எஸ் ரவிக்குமார்!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களை வைத்து கமர்ஷியல் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக அவர் இயக்கிய லிங்கா உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது நடிகராக மட்டும் பணியாற்றி வருகிறார்.
இயக்குனர் விக்ரமனிடம் அஸோசியேட் இயக்குனராக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். அதற்கு முன்பே அவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதில் பணியாற்றிய கே எஸ் ரவிக்குமாருக்கு ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி.
அதில் தொடங்கிய கே எஸ் ரவிக்குமார் தொடர்ந்து கமர்ஷியல் ரீதியான படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார். கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்த இவர் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாட்டாமை. இதில் குஷ்பு, மீனா, வினு சக்ரவர்த்தி, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த படம்தான் சரத்குமாரை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக்கியது என்று சொன்னால் அது மிகையாகாது. அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது சரத்குமார் செய்த ஒரு அலப்பறையைப் பல வருடங்கள் கழித்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஒரு நேர்காணலில் நடித்துக் காட்டியுள்ளார்.
அதில் “நாட்டாமை படத்தில் ஒரு நீண்ட வசனம் பேசும் காட்சியை ஒரே டேக்காக எடுக்கலாம் என முடிவு செய்தோம். அந்த வசனத்தைப் பேசிக் கொண்டே இருக்கும் போது சரத்குமார் வசனத்தை மறந்துவிட்டார். அதை சமாளிப்பதற்காக அங்கு கீழேக் கிடந்த ஒரு சிறு கல்லை உதைத்துத் தள்ளிவிட்டு, “யார்றா இந்த கல்ல இங்க கொண்டு வந்து வச்சது?’ என எங்களை திட்ட ஆரம்பித்தார்.
உடனே ஆட்கள் எல்லாம் வந்து செட்டைக் கிளீன் பண்ண, நான் போய் தேடி அந்த கல்லை எடுத்து “இந்த சின்ன கல்லா உங்கள டிஸ்டர்ப் பண்ணுச்சுன்னு கேட்கவும் ஆளு முழிச்சார்… டைலாக் மறந்துடுச்சுன்னா, அதை சொல்லாம ஏன் இப்படி அலப்பறை பண்ணுறீங்க எனக் கேட்டதும் சைலண்ட் ஆகிட்டார்.” எனக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அவர் சொல்லும்போது அருகில் இருந்த சரத்குமார் அதை சிரித்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.