தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு இந்த முறையும் தங்கள் ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் மற்றும் திமுக தொகுதி பங்கீட்டில் இழுப்பறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை. அதற்காக நாங்கள் கூட்டணி மாறி விடுவோம் என கூறுவது வதந்தி என்று தெரிவித்தார். ராகுலுக்கு அரசியல் ரீதியாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஸ்டாலின் சிறந்த நண்பர், அவரிடம் எங்களின் உரிமையை, அதில் எந்த தவறும் இல்லை என்று கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
