ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் மென்பொருள் பெண் பொறியாளர் ஒருவரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த விவகாரத்தில், செசெட்டி ரேவதி (33) என்ற பெண் மற்றும் அவரது காதலன் நரேந்திரா (23) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த ரேவதி, தனது கணவரைப் பிரிந்து ஹைதராபாத்தில் வசித்து வந்துள்ளார். ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு அடிமையான இவருக்கு ஏற்பட்ட பெரும் கடன் சுமையைத் தீர்ப்பதற்காக, தனது காதலனுடன் சேர்ந்து இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரேவதியும், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராபிடோ (Rapido) ஓட்டுநரான நரேந்திராவும் ஆன்லைன் கேம் மூலம் பழகி, கடந்த சில மாதங்களாகத் த லிவ்-இன் உறவில் இருந்து வந்துள்ளனர். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ராபிடோ டெலிவரிக்குச் செல்வது போல நடித்து, ஜூபிலி ஹில்ஸ் சாலை எண் 44-ல் நடந்து சென்ற மானசா என்ற பெண்ணைப் பின்தொடர்ந்துள்ளனர். ஆள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் மானசாவின் கழுத்தில் இருந்த 1.5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆந்திர எல்லை வழியாகத் தப்ப முயன்ற இருவரையும் மடக்கிப் பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து திருடப்பட்ட தங்கச் சங்கிலி, கடத்தலுக்குப் பயன்படுத்திய ஸ்கூட்டி மற்றும் செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். தற்போது இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
