திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்ற தவெக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியவை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளன. இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது சாதாரண ஆட்சி அல்ல, ஒரு புதுயுகமே பிறந்திருப்பதாகக் குறிப்பிட்டார். எந்தக் கட்சியில் இருந்தாலும் எதிர்கால சந்ததியினர் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், மக்களின் அந்த மாபெரும் எதிர்பார்ப்பே இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் நேரத்தில் மக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்ற குழப்பமின்றி, நல்லவராகவும் நேர்மையாளராகவும் இருக்கக்கூடிய தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என உறுதியாக நின்றதாக அவர் தெரிவித்தார். ஜாதி, மதம், இனம், மொழி கடந்த எல்லைகளைத் தாண்டி மக்கள் அவரை நம்புவதாகவும், நிகழ்ச்சியின் போது இளைஞர்கள் தன்னிடம் வந்து “அண்ணாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறியதன் மூலம் மக்கள் அவர் மீது வைத்துள்ள அசைக்க முடியாத அன்பையும் பாசத்தையும் தான் நேரடியாகக் கண்டறிந்ததாகவும் அவர் கூறினார்.
புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், ‘லஞ்சம் வாங்க மாட்டேன், வாங்கவும் விட மாட்டேன்’ என்ற உறுதியோடு லஞ்ச லாவண்யமற்ற நேர்மையான ஆட்சியை வழங்கி வருவதாக ஜேசிடி பிரபாகர் பாராட்டினார். இந்தியாவில் எவரும் செய்யாத வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம், பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பதவியேற்ற குறுகிய காலத்திற்குள்ளேயே அவர் நடைமுறைப்படுத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். எப்படிச் சம்பாதிக்கலாம் என்று யோசிக்கும் அரசியல் சூழலில், மக்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று சிந்திக்கும் தலைவராக முதல்வர் விஜய் திகழ்கிறார் என்றார்.
தமது நீண்ட கால அரசியல் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பேசிய அவர், முதன்முறையாக விஜய்யைப் பார்த்தபோதே அவரிடம் மீண்டும் ஒரு எம்ஜிஆரைக் கண்டதாகக் குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார். தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் மக்கள் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள முதல்வர் விஜய்யின் வெற்றிக்கும் நல்வாழ்வுக்கும் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.
