மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தவெகவின் தற்காலிக வெற்றியால் இந்த அரசு ஒரு ‘தற்குறி அரசாக’ மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசு ஊழியர்கள் கருத்து சொல்லக் கூடாது எனக் கூறுவது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் சர்வாதிகாரப் போக்காகும் என்று கண்டனம் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்தச் செயல் அல்லது அமைச்சர்களின் புகழ் பாடும் அடிவருடித்தனம் குறித்து அவர் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கின் சீர்கேடு மற்றும் தாராளமாக விற்பனையாகும் மது போதை போன்ற எதற்கும் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என செல்லூர் ராஜு குற்றம் சாட்டினார். ‘சிங்கப்பெண்’ படை அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், சிறுமிகள் காணாமல்போகும் சம்பவங்கள் தொடர்வதாகவும், முந்தைய ஆட்சியைத் தாண்டி எந்தவித புதுமையும் செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இலவச அரிசி விவகாரத்திலும் அரசின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன என்றார்.
ரீல்ஸையும் ரோட் ஷோவையும் நம்பி ஆட்சிக்கு வந்தவர்கள் ‘ரியல்’ ஆட்சியை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், காவிரி நீர் பிரச்சனையில் எந்தக் கவனமும் செலுத்தாமல் முதலமைச்சர் ஆந்திராவிற்குச் சென்றதை விமர்சித்தார். டெல்டா விவசாயிகள் துயரத்தில் இருக்கும்போது, கர்நாடக தலைவர்களான கார்கே அல்லது ராகுல் காந்தியிடம் பேசி குறைந்தபட்சம் 15 டிஎம்சி தண்ணீரைக் கூட பெற முடியாத ஒரு திறனற்ற முதலமைச்சராகவே அவர் காட்சியளிப்பதாகக் கூறினார். சினிமா கதாநாயகன் போன்ற தோற்றத்தைத் தாண்டி மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்சினையைக் குறிப்பிட்ட செல்லூர் ராஜு, மழைநீர் வடிகால்களைச் சீரமைக்க வருவாய் துறை அமைச்சர் மேலும் ஆறு மாதங்கள் அவகாசம் கேட்பது இந்த அரசின் இயலாமையை அமைச்சரே ஒப்புக்கொள்வதற்குச் சமம் என்றார். ரீல்ஸில் ஆட்சியை நடத்திவிடலாம் என நினைக்கும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரித்து தனது பேட்டியை நிறைவு செய்தார்.
