CM சார்.. யாரை பக்கத்துல வச்சுக்கிட்டு ஊழலை ஒழிப்போம்னு பேசிட்டு இருக்கீங்க?…. விஜய்யின் கரூர் விசிட்டை கிழித்து தொங்கவிட்ட ஜெயக்குமார்….!

By Nanthini on ஆடி 11, 2026

Spread the love

கரூரில் அண்மையில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவும், தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றன. இந்த மக்கள் சந்திப்பில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையானது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் விஜய் இன்னும் சினிமா படப்பிடிப்பில் இருப்பதைப் போலவே உணர்ச்சிவசப்பட்டு, அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மிகக் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “முதலமைச்சர் விஜய் கரூரில் வழக்கமான ஒரு சினிமா ஸ்கிரிப்டை தான் பேசியுள்ளார். சினிமாவில் ஒரு ஷாட் எடுப்பதை போல, அவருக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட வசனத்தை மேடையில் ஒப்பித்துவிட்டுச் சென்றுள்ளார். வரவிருக்கும் இடைத்தேர்தலை மனதில் வைத்துதான் அவரது இந்த கரூர் பயணமே திட்டமிடப்பட்டு அமைந்துள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்கள், ஆனால் அதை இதுவரை செய்யவில்லை. தமிழக அரசுத் துறைகளில் உள்ள மூன்றரை லட்சம் காலி பணியிடங்கள் குறித்து இந்த கரூர் மேடையில் அவர் பேசியிருக்கலாம், ஆனால் அதுபற்றி வாய் திறக்கவில்லை,” என்று சாடினார்.

   

மேலும் விவசாயிகளின் பிரச்சினைகளை விஜய் கண்டுகொள்ளவில்லை என்று சாடிய அவர், “குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்படாததால் தமிழக விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வரும் நிலையில், விவசாயப் பிரச்சினை குறித்து முதலமைச்சர் கரூரில் ஏதேனும் பேசினாரா? விஜய்யை மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் தான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு வாரி வாரி வழங்கிய வள்ளல். இத்தனை ஆண்டுக்கால சினிமா வாழ்க்கையில் விஜய் கோடி கோடியாகச் சம்பாதித்திருக்கிறார். கரூரில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாயைத் தனது சொந்தப் பணத்தில் இருந்து அவர் கொடுத்திருக்கலாமே? அப்படிச் செய்திருந்தால், அந்தப் பணத்தின் வட்டியை வைத்தே அக்குடும்பங்கள் நன்றாக வாழ்ந்திருக்குமே?” என்று கேள்வி எழுப்பினார்.

   

அரசு வேலை வழங்கப்பட்ட விதம் குறித்துப் பேசிய ஜெயக்குமார், “கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல, அரசுப் பணத்தை எடுத்து விஜய் கொடுத்துள்ளார். இப்படித் தன்னிச்சையாக அரசு வேலையைக் கொடுத்து, இரவு பகலாக டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்பை முதலமைச்சர் ஏன் பறிக்க வேண்டும்? ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், யாரை அருகில் வைத்துக் கொண்டு விஜய் இதையெல்லாம் பேசுகிறார்? தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பதை முற்றிலும் மறந்துவிட்டு விஜய் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார்,” என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.