தெலங்கானா மாநிலம் சூர்யபேட்டை பகுதியில் பெற்ற தாயும், வளர்ப்பு தந்தையும் சேர்ந்து தங்களின் சொந்தக் குழந்தைகளையே மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லாரி ஓட்டுநரான நகிரிகாந்தி ரவி மற்றும் அவரது இரண்டாவது மனைவி இந்து ஆகிய இருவருடன் 5 வயதுடைய தனுஷ் மற்றும் 2 வயதுடைய ரேவந்த் ஆகிய இரு குழந்தைகளும் வசித்து வந்தனர். இவர்களது வீட்டில் இருந்து அடிக்கடி குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்பதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர், சந்தேகமடைந்து உடனடியாக காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் மற்றும் சைல்ட்லைன் அதிகாரிகள், அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த காட்சிகள் அவர்களை உலுக்கியுள்ளன. பிஞ்சு குழந்தைகளின் உடல் முழுவதும் தீக்காயங்கள், நகக்கீறல்கள் மற்றும் கடுமையாக தாக்கப்பட்டதற்கான தழும்புகள் நிறைந்து காணப்பட்டன. இதில் கொடுமையின் உச்சமாக, 2 வயது பச்சிளம் குழந்தையின் இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட இரு குழந்தைகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அந்த தம்பதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. லாரி ஓட்டுநர் ரவி ஏற்கனவே முதல் மனைவியை பிரிந்தவர் என்பதும், இந்து தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ரவியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதில் மூத்த குழந்தை இந்துவின் முதல் கணவருக்குப் பிறந்தவர். தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், தனிமையையும் அனுபவிக்க இந்த இரு குழந்தைகளும் இடையூறாக இருப்பதாகக் கருதி, கடந்த சில காலமாகவே கரண்டியை பழுக்கக் காய்ச்சி உடலில் சூடு வைப்பது, சிகரெட்டால் சுடுவது, எலும்பு முறியும் அளவுக்கு தாக்குவது என அடுக்கடுக்கான கொடூரங்களை அரங்கேற்றியுள்ளனர்.
தற்போது, இந்த இரக்கமற்ற தம்பதி மீது பிஎன்எஸ் சட்டம் மற்றும் சிறார் நீதி, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இருவரையும் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில், மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற்று நலமடைந்த அந்த இரு குழந்தைகளும் சூர்யபேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்திற்குப் பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர். பெற்ற தாயும், தந்தையும் தங்களின் சுயநலத்திற்காகப் பிஞ்சுக் குழந்தைகளைச் சித்திரவதை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
