தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்தவர் இளையராஜா. அவரை இசைஞானி, ராகதேவன் என பல பெயர்களில் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

1969 ஆம் ஆண்டு சென்னைக்கு இசையமைப்பாளராக வேண்டுமென்று வந்த இளையராஜாவும் அவர் சகோதரர்களும் 1976 ஆம் ஆண்டு அன்னக்கிள் திரைப்படம் மூலமாக அறிமுகமானார்கள். இடைப்பட்ட காலத்தில் இளையராஜா ஜி வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றி இசையமைப்புப் பணிகளைக் கற்றுக்கொண்டார். அது போல மேற்கத்திய இசையை அவர் தன்ராஜ் மாஸ்டரிடம் கற்றுக்கொண்டார்.
இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் இளையராஜா யாரிடமும் என்று எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் எனக் கேட்கமாட்டாராம். தன் திறமையை உணரும் தயாரிப்பாளர்கள் தானாக தன்னிடம் வரட்டும் என பிடிவாதமாக இருப்பாராம். அவருக்காக அவருடைய அண்ணன் பாஸ்கர்தான் பல ஆபிஸ்களுக்கு சென்று வாய்ப்புக் கேட்பாராம்.
அன்னக்கிளி வாய்ப்புக் கூட இளையராஜாவுக்கு எழுத்தாளர் ஆர் செல்வராஜ் மூலமாகதான் வந்துள்ளது. இந்நிலையில் சென்னை வந்த புதிதில் ஒரே ஒரு முறை தங்களுக்கு சினிமாவில் உதவி செய்ய வேண்டும் என ஒருவரை சென்று சந்தித்து உதவி கேட்டுள்ளார் இளையராஜா. அந்த நபர் எழுத்தாளர் ஜெயகாந்தன். கம்யூனிஸ்ட் கட்சியில் பாடகர்களாக இருந்த போதே இளையராஜாவுக்கும் ஜெயகாந்தனுக்கும் பழக்கம் உண்டு என்பதால் அவரிடம் உதவி கேட்டுள்ளார்.

தன் அண்ணன் பாஸ்கர், பாரதிராஜாவோடு ஜெயகாந்தன் வீட்டுக்கு சென்ற இளையராஜா அவரிடம் “ஊரை விட்டு வந்து விட்டோம். சினிமாவில் முயற்சி பண்ணலாம் என்று நினைக்கிறோம். உங்களை நம்பித்தான் சென்னைக்கு வந்தோம் தோழரே!”எனக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு கடுப்பான ஜெயகாந்தன் “என்னை நம்பி வந்தீர்களா? என்னை கேட்காமல், என் அனுமதி இல்லாமல் என்னை நம்பி எப்படி நீங்கள் வரலாம்? உங்களை நம்பித்தானே நீங்கள் வந்திருக்க வேண்டும்?” என கோபத்தோடு முகத்திலடித்தார் போல சொல்லிவிட்டாராம். இதைக் கேட்டு பாரதிராஜாவும் பாஸ்கரும் ஜெயகாந்தன் மேல் கோபம் கொண்டுள்ளனர்.

ஆனால் அவர்களிடம் இளையராஜா “அவர் சொல்வதுதான் சரி. நாம் நம்மைதான் நம்ப வேண்டும். இதுதான் அவர் நமக்கு கொடுத்துள்ள விஷயம்” எனக் கூறினாராம். ஒருவேளை இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் இளையராஜா யாரிடமும் சென்று வாய்ப்புக் கேட்காமல் உறுதியாக இருந்திருப்பார் போலும்.
