சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான நிலையில், முதல் நாள் காட்சியைக் காண திரண்ட நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக விஜய் திரைப்படங்களின் முதல் நாள் காட்சிகளில், ரசிகர்கள் திரைக்கு அருகே சென்று நடனமாடியும் முழக்கங்களை எழுப்பியும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்துவது வழக்கம். ஆனால், இம்முறை ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கும் வகையில், திரையரங்கில் திரைக்கு முன்பாக முள்வேலி போன்ற வலுவான தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த ரசிகர்கள் சிலர் பெரும் அதிருப்தியையும் ஆச்சரியத்தையும் அடைந்த நிலையில், இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைக்கு அருகே சென்று வழக்கம் போல கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாமல் போனதால், ரசிகர்கள் பலர் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அதேவேளையில், ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திரையரங்கின் திரைகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாமல் தடுப்பதற்காகவுமே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. எது எப்படியோ, திரைப்பட வெளியீட்டு நாளில் திரையரங்கிற்குள் அமைக்கப்பட்ட இந்த முள்வேலி தடுப்புகள் பற்றிய செய்தி, தற்போது அறந்தாங்கி பகுதி விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரவலாக விவாதிக்கப்படும் பேசுபொருளாக மாறியுள்ளது.
