தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறையும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதால் ஸ்டாலினுக்கு அது பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் வெளிப்படையாகவே கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதும் இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட இருப்பதாகவும் சமீப காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக IUML தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் 16 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு கருணாநிதி வாய்ப்பு வழங்கினார். அதனை சுட்டிக்காட்டி திமுக தலைமையிடம் வலியுறுத்துவோம் என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே பல கூட்டணி கட்சிகள் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தற்போது இதுவும் புதிய சிக்கலாக மாறியுள்ளது.
