“விஜய்யின் தவெக-வுக்கு ஆதரவு”… ஐயுஎம்எல் எடுத்த அதிரடி முடிவு… காதர் மொய்தீன் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on வைகாசி 7, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநிலப் பொறுப்பாளர் அருண்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) தலைவர் காதர் மொய்தீனைச் சந்தித்து ஆதரவு கோரினார். இருப்பினும், தவெக-விற்கு ஆதரவு அளிக்க ஐயுஎம்எல் தரப்பு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இது குறித்து விளக்கமளித்த காதர் மொய்தீன், தாங்கள் நீண்டகாலமாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து வருவதாகவும், தற்போதும் அதே கூட்டணியில் உறுதியாகத் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்திய காதர் மொய்தீன், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எடுக்கும் முடிவே தங்களின் முடிவாக இருக்கும் என்று குறிப்பிட்டார். கூட்டணி தர்மத்தின்படி, திமுக தலைமை தவெக-விற்கு ஆதரவு அளிக்குமாறு கூறினால் மட்டுமே அது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றும், அதுவரை திமுகவின் நிலைப்பாட்டிற்குத் தாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம், வரும் தேர்தலில் ஐயுஎம்எல் கட்சி திமுக கூட்டணியில் நீடிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.