இனி சென்னைக்கு “Tata” சொல்லிடலாம்! சொந்த ஊரிலேயே IT வேலை – முதல்வர் போட்ட பலமான ஸ்கெட்ச்!

By S.RISHVANA on மாசி 27, 2026

Spread the love

தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்லாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ‘டைடல் நியோ’ (TIDEL Neo) மினி ஐடி பூங்காக்களுக்கு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார். சுமார் 117.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகும் இந்தத் திட்டங்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் ஐடி வளர்ச்சியைப் பரவலாக்கும் அரசின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வேலைக்காக இடம்பெயரும் இளைஞர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில், திருநெல்வேலியின் ரெட்டியார்பட்டி, விருதுநகரின் கூரைக்குண்டு மற்றும் ஈரோட்டின் கேங்கபுரம் ஆகிய பகுதிகளில் இந்த அதிநவீன பூங்காக்கள் அமையவுள்ளன. ஒவ்வொன்றும் சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்படவுள்ளன. இதில் தடையற்ற மின்சாரம், அதிவேக இணைய வசதி மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான பிரத்யேக இடவசதிகள் ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன.

   

இந்த நான்கு மாவட்டங்களில் அமையவுள்ள புதிய ஐடி பூங்காக்கள் மூலம் சுமார் 1,800 முதல் 2,000 வரையிலான நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன. குறிப்பாக, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குத் தங்களின் சொந்த ஊரிலேயே உயர்தரமான ஐடி வேலைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், அந்தப் பகுதிகளில் புதிய வணிக வாய்ப்புகளையும் பெருக்கும்.

   

ஏற்கனவே விழுப்புரம், சேலம் மற்றும் தூத்துக்குடி போன்ற இடங்களில் மினி டைடல் பூங்காக்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. “அனைவருக்கும் அனைத்தும்” என்ற திராவிட மாடல் ஆட்சியின் கீழ், ஐடி துறையின் பலன்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைவதை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.