கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் புது விளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திவாகர் என்ற 13 வயது சிறுவன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய வடவாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த திவாகர், படிப்பில் போதிய கவனம் செலுத்தாமல் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை கண்டித்த நிலையில், பெற்றோர் மீண்டும் திட்டுவார்களோ என்ற அச்சத்தில் அதிகாலை வேளையில் பூவனூர் ரயில் நிலையம் அருகே சென்ற ரயிலின் முன் பாய்ந்து அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சிறு கண்டிப்பு, பிஞ்சு மனதைக் காயப்படுத்தி இத்தகைய விபரீத முடிவை எடுக்கத் தூண்டியிருப்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
