லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள், அந்நாட்டின் அப்பாவி குழந்தைகளின் வாழ்வை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்குள் மட்டும், இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 83 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 254 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களின் காரணமாக தினமும் சராசரியாக 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்படுவது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 28 மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இப்போரில், லெபனானில் மட்டும் ஒட்டுமொத்தமாக 329 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,632 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்று யுனிசெப் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பை ஒடுக்குவதாகக் கூறி இஸ்ரேல் முன்னெடுக்கும் இந்தத் தாக்குதல்கள், நேரடியாகக் குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. போரின் கோர முகத்திற்கு இந்தச் சிறுவர்களின் மரணங்களே நேரடிச் சாட்சியாக உள்ளன என்று அவ்அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
போர்ச் சூழல் காரணமாக லெபனான் முழுவதும் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை சுமார் 7 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்; இதில் சுமார் 2 லட்சம் பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலிக தங்கும் முகாம்கள் மற்றும் பள்ளிகள் எனப் பொதுமக்கள் வாழும் இடங்களிலும் தாக்குதல்கள் நிகழ்வது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ள மக்களின் துயரம், தற்போதைய தீவிரத் தாக்குதல்களால் இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வாழும் இடங்களைத் தாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று யுனிசெப் வலியுறுத்தியுள்ளது. போர்க்களத்தில் அடிப்படை உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பது மிக அவசியம் என்று அறிவுறுத்தியுள்ள அந்த அமைப்பு, அப்பாவி குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் இச்செயல்களுக்குத் தனது கண்டனத்தையும் கவலையையும் பதிவு செய்துள்ளது. அமைதி தவறிய இந்த மண்ணில், குழந்தைகளின் பாதுகாப்பு என்பது தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
