தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி அமைந்தது முதலே பல்வேறு அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழ்நாடு அரசுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட நாராயணா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் இந்த முக்கியப் பொறுப்பில், தமிழகத்தைச் சேராத ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
குறிப்பாக, தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே மேகதாது அணை உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை இந்தப் பதவியில் அமர்த்தலாமா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. “தமிழ்நாட்டில் இந்தத் தகுதியான நபர்களே இல்லையா?” என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே ஜோதிடர் ஒருவருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டு, பின்னர் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து இந்த புதிய நியமனமும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்: “வெங்கட நாராயணா குறித்து பலரும் தவறான புரிதலில் உள்ளனர். அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்ல; ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கர்நாடகாவில் அவர் தொழில் மட்டுமே செய்து வருகிறார். மேலும், அவர் டெல்லியில் ஒருங்கிணைப்பாளராக மட்டுமே செயல்படப் போகிறார் என்றும், பெரிய கொள்கை முடிவுகளையோ அல்லது ஒப்புதல்களையோ அவர் தனித்து எடுக்கப் போவதில்லை” என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், வெங்கட நாராயணாவின் நம்பகத்தன்மை குறித்தும் விவரித்தார். “கடந்த காலங்களில் அரசியல் ரீதியாகப் பல அழுத்தங்கள் வந்தபோதும், தலைவர் விஜய் மீதும், கட்சி மீதும் அவதூறுகளைப் பரப்புமாறு வற்புறுத்தப்பட்டபோதும், அவர் எதற்கும் பணியாமல் உறுதியாக நின்றவர். மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவருக்கே இந்தத் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தேர்தலில் தோற்றவர்களுக்குப் பொழுதுபோக்காகக் கொடுக்கப்பட்ட இந்த அலங்காரப் பதவி, தற்போது தகுதியான ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பணமோ அல்லது இந்த பதவியோ பெரிய விஷயமல்ல; அவரது விசுவாசமே முக்கியம்” என்று அமைச்சர் நிர்மல் குமார் தன் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
