“விமானி சீட்டில் குறட்டை விட்ட முதலாளி… தந்தையின் மரணத்திற்கு இதுதான் காரணமா?….ஆதாரத்தை தட்டித்தூக்கிய அஜித் பவரின் மகன்..!!

By Muthu Mani on பங்குனி 3, 2026

Spread the love

மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய ‘விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ்’ (VSR Ventures) நிறுவனத்தின் உரிமையாளர் ரோஹித் சிங், விமானம் பறந்துகொண்டிருக்கும் போதே அதன் காக்பிட்டில் (Pilot Seat) அமர்ந்து தூங்கும் வீடியோவை அஜித் பவாரின் மகன் ஜெய் பவார் வெளியிட்டுள்ளார். இது விமான நிறுவனத்தின் மெத்தனப் போக்கைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

கடந்த ஜனவரி 28-ஆம் தேதி பாராமதி தொகுதிக்குச் சென்றபோது ஏற்பட்ட இந்த விபத்தில், அஜித் பவாருடன் சேர்த்து மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விமானத்தின் கருப்புப் பெட்டி சேதமடைந்தது ஏற்கனவே பலத்த சந்தேகங்களைக் கிளப்பியிருந்தது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் பாதுகாப்பு விதிகளை மீறிச் செயல்படுவதைக் காட்டும் இந்த வீடியோ, விபத்தின் பின்னணியில் மிகப்பெரிய அலட்சியம் இருப்பதை உறுதிப்படுத்துவதாக ஜெய் பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

   

தனது தந்தையின் மரணத்திற்கு விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இந்த பொறுப்பற்ற பராமரிப்பு மற்றும் மேலாண்மைதான் காரணம் என்று கூறியுள்ள ஜெய் பவார், உரிமையாளர் ரோஹித் சிங்கை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், அந்த நிறுவனத்தின் அனைத்து விமானச் சேவைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், விபத்து குறித்த விசாரணை வெளிப்படையாகவும் உண்மையாகவும் நடைபெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

   

விபத்து விசாரணை வாரியம் சமீபத்தில் வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில் தனக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்துள்ள ஜெய் பவார், மகாராஷ்டிரா மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். விமானப் பாதுகாப்பில் இத்தகைய அலட்சியங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.