தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் தொகுதிகளைக் குறிவைத்து பாஜக தனது அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் மேலிடப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில், வெற்றி வாய்ப்புள்ள சுமார் 120 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அமித் ஷா போன்ற தேசியத் தலைவர்களின் தொடர் வருகையும், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிரான ஊழல் புகார்கள் மற்றும் நிர்வாகத் தோல்விகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களும், திமுகவின் வாக்கு வங்கியில் விரிசலை ஏற்படுத்த பாஜக முயல்வதைக் காட்டுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதன்முதலாக(1957) போட்டியிட்டு வென்ற தொகுதி குளித்தலை. அதன்பிறகு அது அதிமுகவின் கோட்டையாக மாறியது. ஆனால் 2016-ல் இருந்து அங்கு மீண்டும் தலைதூக்கியிருக்கிறது திமுக. இதனால், இம்முறை குளித்தலையில் திமுகவை தோற்கடித்தால் இமேஜ் கூடும் என்று நினைக்கிறதாம் பாஜக தலைமை. அத்தொகுதியை EPSயிடம் கேட்க, அவரும் அதற்கு ஓகே சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
மறுபுறம், இந்த சவாலை முறியடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை வீடு வீடாகக் கொண்டு சேர்க்கும் பணியில் அக்கட்சியின் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். 2026 தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என திமுக நம்பிக்கையுடன் இருக்கும் நிலையில், அதிமுக-பாஜக மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது களத்தில் கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. மேலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய கட்சிகளின் வரவு, வாக்குகள் சிதற வழிவகுக்கும் என்பதால், தங்களின் கோட்டையைத் தக்கவைத்துக்கொள்ள திமுகவும், அதைத் தகர்க்க பாஜகவும் மாறி மாறிப் போடும் திட்டங்களால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது.
