சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை விரைவில் தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.
அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாக தமிழர்களின் இசை அன்னையாக இளையராஜா இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவரின் பயோபிக் திரைப்படம் பற்றிய அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்க கனெக்ட் மீடியா என்ற வட இந்திய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் என அறிவிப்புகள் வெளியாகி, திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.

#image_title
இந்நிலையில் இப்போது அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி ரசிகர்களை சோகத்தில் மூழ்கச் செய்துள்ளது. அதற்கான காரணமாக படத்தைத் தயாரிக்க இருந்த கனெக்ட் மீடியா நிறுவனம் இப்போது பின்வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரு காரணமாக திரைக்கதையில் தனுஷுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் கூட கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் படம் சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து வராததால் இந்த தகவல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது. விரைவில் இது குறித்த தெளிவான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
