அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், பேச்சுவார்த்தை குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட தகவலை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் 5 நாட்கள் தாக்குதலை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், அப்படி எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரானியத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. நிதி மற்றும் எண்ணெய் விவகாரங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து தப்பிக்கவே டிரம்ப் இத்தகைய போலிச் செய்திகளைப் பரப்புவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் கலிபாஃப் இது குறித்துப் பேசுகையில், ஈரானின் எச்சரிக்கைக்கு டிரம்ப் பணிந்துவிட்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரானின் கடுமையான நிலைப்பாட்டைக் கண்டு அஞ்சியே டிரம்ப் பின்வாங்கியுள்ளதாகவும், அதை மறைக்கவே பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை அவர் ஆடுவதாகவும் ஈரான் தரப்பில் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த முரண்பட்ட தகவல்கள் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
