மத்திய கிழக்கு பகுதியில் தற்காலிகமாக ஓய்ந்திருந்த பதற்றம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. ஈரான் நாடு தங்கள் நாட்டின் மீது ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல் நடத்தியுள்ளதாக பஹ்ரைன் அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கக் கடற்படையின் முக்கியத் தளம் அமைந்துள்ள பஹ்ரைன் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலானது தங்களது நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் என்று பஹ்ரைன் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட புரிந்துணர்வைத் தொடர்ந்து கடந்த வாரம் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு அமைதி நிலவியது. ஆனால், கடந்த வியாழக்கிழமை அந்த வழியாகச் சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்புக் கிடங்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே, பஹ்ரைனில் உள்ள அமெரிக்கப் படைகளுடன் தொடர்புடைய இடங்களை ஈரான் தற்போது தாக்கியுள்ளது.
இந்த மோதல் குறித்து அமெரிக்கத் துணை அதிபர் வான்ஸ் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தாங்கள் எப்போதும் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மதித்து நடப்பதாகவும், ஆனால் தங்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு விதிமீறல்களுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், “வன்முறைக்கு வன்முறை மூலமாகவே பதில் அளிக்கப்படும்” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் நீடிக்கிறது.
