மோடியின் போன் கால் தோல்வி… “இனி வழிவிட முடியாது!” – இந்தியாவுக்குக் கதவை அடைத்த ஈரான்?… கச்சா எண்ணெய் விநியோகத்தில் பேரதிர்ச்சி….!

By Nanthini on பங்குனி 13, 2026

Spread the love

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலக வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவர் ஆயதுல்லாஹ் மொஜ்தபா கமேனியின் நேரடி உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள சுமார் 30 இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் அந்நாட்டின் புதிய உச்ச தலைவர் ஆயதுல்லாஹ் மொஜ்தபா கமேனி ஆகியோருடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அங்குள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை வலியுறுத்திய அவர், இந்திய சரக்குக் கப்பல்களைத் தடையின்றி அனுமதிக்க வேண்டும் எனத் தனது கோரிக்கையை முன்வைத்தார்.

   

இருப்பினும், பிரதமர் மோடியின் கோரிக்கையை ஈரான் அதிபர் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நட்பு நாடுகளாகச் செயல்படும் எந்தவொரு நாட்டிற்கும் இந்த ஜலசந்தியில் அனுமதி கிடையாது” என்று ஈரான் தரப்பில் கறாராகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழிவிட முடியாது என்ற ஈரானின் இந்த திடீர் நிலைப்பாடு டெல்லி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

ஈரானின் இந்த நடவடிக்கையினால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் கடல் வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியை உருவாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ரஷ்யாவிடமிருந்து மாற்று வழிகளில் கச்சா எண்ணெய் வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஈரானின் இந்தத் தடையால் சர்வதேச அளவில் வர்த்தக ரீதியான மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.