“87 நாட்கள் இருட்டு.. நரகத்தை பார்த்த மக்கள்”.. உலகையே அதிரவைத்த ஈரான் அதிபரின் திடீர் உத்தரவு….!

By Nanthini on வைகாசி 26, 2026

Spread the love

அமெரிக்கா – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரான் மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே மிகக் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் மிக முக்கியமானது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த இண்டர்நெட் முடக்கம் ஆகும். கடந்த ஜனவரி 8-ம் தேதி அரசுக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இந்தத் தடை முதன்முதலில் கொண்டு வரப்பட்டது. பின்னர் பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் தீவிரமடைந்ததால், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. கிட்டத்தட்ட 87 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்தத் தடையால் ஒட்டுமொத்த தேசமும் ஸ்தம்பித்தது.

இந்தத் நீண்ட கால இண்டர்நெட் முடக்கம் ஈரானிய மக்களின் அன்றாட வாழ்க்கையையும், நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்று இண்டர்நெட் கண்காணிப்பு அமைப்பான ‘நெட் பிளாக்ஸ்’ (NetBlocks) தெரிவித்துள்ளது. குறிப்பாக, போர் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடந்த காலகட்டத்தில், மக்கள் தங்களின் பாதுகாப்பு சார்ந்த அவசரத் தகவல்களைக் கூடப் பெற முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகினர். இதுதவிர மருத்துவம், கல்வி, வங்கிச் சேவைகள் போன்ற அத்தியாவசியத் துறைகள் முடங்கியதோடு, ஆன்லைன் வர்த்தகத்தை மட்டுமே நம்பியிருந்த சிறு வியாபாரிகளும், உள்ளூர் நிறுவனங்களும் ஈடுகட்ட முடியாத பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

   

தற்போது இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு ஒரு தற்காலிக விடிவுகாலம் பிறந்துள்ளது. ஈரான் நாட்டின் புதிய அதிபரான மசூத் பெஷேஷ்கியான், நாடு முழுவதும் இணைய சேவையை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் பல வாரங்களாக துண்டிக்கப்பட்டிருந்த இணையத் தொடர்பு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. இந்த முடிவு தங்களுக்குப் பெரும் நிம்மதியளிப்பதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ள போதிலும், நாட்டின் எல்லையில் நிலவும் போர்ச் சூழலும் பொருளாதார முடக்கமும் இன்னும் முழுமையாகக் குறையவில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.

   

இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன. ஈரானின் அணுசக்தி திட்டங்களை முழுமையாகக் கைவிட வேண்டும் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகளை ஈரான் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதேபோல, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹார்முஸ் கடல் வழித்தடத்தைக் கைப்பற்றி கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தில் ஈரான் உறுதியாக உள்ளது. இதனால் இருதரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ள சூழலில், பெர்சியன் கடலில் அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ளதால் ஈரானின் துறைமுக வர்த்தகம், உணவுப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஆகியவை முற்றிலுமாக முடங்கியுள்ளன.