ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், அடுத்தகட்டமாகத் தரைவழியாகவும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரான் தனது ராணுவ பலத்தைக் காட்டி அமெரிக்காவிற்குப் பகிரங்கமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் ராணுவ வட்டாரங்கள், அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனமான ‘தஸ்னிம்’-மிடம் (Tasnim) பேசுகையில், “எங்கள் நாட்டின் மீது தரைவழித் தாக்குதல் நடத்துவது என்பது எங்களின் சிவப்பு எச்சரிக்கை கோடுகளில் (Red Lines) ஒன்றாகும். இதை மீறும் பட்சத்தில் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஒவ்வொரு நகர்வையும் தாங்கள் கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஈரான் ராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையில், “ஒவ்வொரு முறையும் எதிரியின் தாக்குதலுக்கு நாங்கள் தகுந்த பதிலடி கொடுத்து ஆச்சரியப்படுத்தி வருகிறோம். இந்தத் தரைவழித் தாக்குதல் விவகாரத்திலும் அமெரிக்காவிற்குப் பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது” என அதிரடியாகத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், அமெரிக்கப் படைகள் ஈரானுக்குள் நுழைந்தால் மிக மோசமானத் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என்பதை ஈரான் சூசகமாக உணர்த்தியுள்ளது.
தற்போது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, தரைவழியாகவும் களமிறங்கினால் அது மத்திய கிழக்கு ஆசியாவில் ஒரு நீண்டகாலப் போருக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. ஈரானின் இந்தத் துணிச்சலானப் பதிலடி மற்றும் ராணுவத் தயார்நிலை, அமெரிக்கா தனது திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது.
