மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல், தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நேரடி மோதலாக உருவெடுத்துள்ளது. சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முழுமையாக மூடியுள்ளதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகும். உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே நடைபெறுவதால், நீரிணை முடக்கம் உலக நாடுகளில் பெரும் பொருளாதார நெருக்கடியையும் எரிபொருள் விலை உயர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த இக்கட்டான நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள 48 மணி நேரக் கெடு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், தவறினால் ஈரானில் உள்ள மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு அவை அழிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நேரடி மிரட்டல் வளைகுடா பகுதியில் போர் மேகங்களை மேலும் சூழ்ந்து கொள்ளச் செய்துள்ளது.
அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு ஈரான் ராணுவம் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் எரிசக்தி மையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குச் சொந்தமான அனைத்து எரிசக்தி நிலையங்கள், தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளைத் தரைமட்டமாக்குவோம் என ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆலைகளையும் குறிவைப்போம் என ஈரானிய ராணுவத்தின் ‘கதம் அன்பியா’ தலைமையகம் விடுத்துள்ள அறிக்கை பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
ஏற்கனவே இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், தற்போது அமெரிக்காவுடனான இந்த நேரடி மிரட்டல் போக்கு உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருபுறம் இஸ்ரேல் உடனான மோதல், மறுபுறம் அமெரிக்காவின் 48 மணி நேரக் கெடு என ஈரான் இருமுனை நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இரு நாடுகளும் தங்கள் பிடிவாதத்தைக் தளர்த்திக் கொள்ளாத பட்சத்தில், வளைகுடா பிராந்தியத்தில் ஒரு மிகப்பெரிய அளவிலான போர் வெடிக்கக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
