“நீ செத்துப்போனா உன்னை விட்டுடுவோம்” நிதி நிறுவன ஊழியர்களின் கொடூர மிரட்டல்… 4 பிள்ளைகளின் தாய் தற்கொலை..!!

By Soundarya on பங்குனி 22, 2026

Spread the love

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராஜ்கண்ட் கிராமத்தில், நுண்நிதி நிறுவனத்தின் (Microfinance) கடன் சுமை மற்றும் ஊழியர்களின் அத்துமீறிய வசூல் நடவடிக்கையால் 30 வயதான துர்கா தேவி என்ற தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு பிள்ளைகளின் தாயான இவர், ‘கேஷ்பா மைக்ரோ கிரெடிட்’ நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். பாட்னாவில் காய்கறி வியாபாரம் செய்யும் இவரது கணவர் பவன் மஹதோ குடும்பத்தை வழிநடத்தி வந்த நிலையில், கடன் தவணையைச் செலுத்தக் கோரி நிதி நிறுவன ஊழியர்கள் கொடுத்த கடுமையான அழுத்தம் இப்பெண்ணை விபரீத முடிவை நோக்கித் தள்ளியுள்ளது.

நிதி நிறுவன ஊழியர்கள் துர்கா தேவியின் வீட்டிற்குச் சென்று அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். தவணை கட்டத் தவறியதற்காக வீட்டிலிருந்த பொருட்களைப் பலவந்தமாக எடுத்துச் சென்றதுடன், அவரது கைபேசியையும் பறித்துச் சென்றுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, “நீ செத்துப்போனால்  உன்னை விட்டுவிடுவோம்” என்பது போன்ற கொடூரமான வார்த்தைகளால் அவரை மனரீதியாகச் சிதைத்துள்ளனர். இத்தகைய தொடர் அவமானங்களாலும், தற்கொலை செய்துகொண்டால் கடன் தள்ளுபடி ஆகிவிடும் என்பது போன்ற மிரட்டல்களாலும் நிலைகுலைந்த அந்தப் பெண், தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

   

இந்தச் செய்தி பரவியதும் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் யாதவ் என்ற ஊழியரைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த கோரௌல் காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், தடய அறிவியல் குழுவினருடன் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிளை மேலாளர் மற்றும் ஊழியர்களின் தூண்டுதலே இந்தப் மரணத்திற்கு முதன்மைக் காரணம் எனப் புகார் எழுந்துள்ள நிலையில், தப்பியோடிய மற்ற நபர்களைப் பிடிக்கப் போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.