ஈரான் – இஸ்ரேல் போர் எதிரொலி: “எங்க பிள்ளைகளை மீட்டுக் கொடுங்க” எப்படியாவது காப்பாத்தி கொண்டு வாங்க… அரசுக்கு பெற்றோர்கள் கண்ணீர் கோரிக்கை..!!

By Soundarya on பங்குனி 3, 2026

Spread the love

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், கத்தார் நாட்டின் தோஹாவில் வசிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களின் குடும்பத்தினர் கடும் அச்சத்தில் உள்ளனர். சஹர்சா மாவட்டத்தைச் சேர்ந்த அமித் குமார் சவுகான் மற்றும் கேசவ் குமார் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் தோஹாவில் வசித்து வருகின்றனர். போர் குறித்த செய்திகள் ஊடகங்களில் தீயாகப் பரவத் தொடங்கியதில் இருந்து, அங்குள்ள தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அவர்களது பெற்றோர்கள் மிகுந்த கவலையுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் ஒருவர் தனது உணர்ச்சிப்பூர்வமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். தனது மகன், மருமகள் மற்றும் கைக்குழந்தைகள் என மொத்த குடும்பமும் அங்கே இருப்பதால், அவர்களை எப்படியாவது பாதுகாப்பாக மீட்டு வர வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கத்தார் ஏர்வேஸில் பணியாற்றி வரும் மற்றொரு இளைஞரின் பெற்றோரும், போர்ச் செய்திகளைக் கேட்டு மிகுந்த பயத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தனது மகன் பாதுகாப்பாகத் திரும்பினால் போதும் என்பதே தங்களின் ஒரே விருப்பம் என அவர்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர்.

   

 

தற்போது நிலவும் சூழல் குறித்துப் பேசியுள்ள இளைஞர்கள், தங்கள் பெற்றோரிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தங்களின் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்துள்ளனர். போர் பதற்றம் காரணமாக தற்போது வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அனைவரும் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாகத் தங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதால், இந்திய அரசு தலையிட்டு அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பீகாரில் உள்ள அவர்களது உறவினர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.