ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற முக்கியப் பேச்சுவார்த்தையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு பிரத்யேக “தொலைபேசி உதவி இணைப்பை” நிறுவ ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றான இந்த நீர்வழியில் பயணிக்கும் கப்பல்கள் தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்கவும், தவறான புரிதல்களை உடனுக்குடன் தீர்க்கவும் இந்த ஒருங்கிணைப்பு மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஆட்சேபனையோ அல்லது வழித்தடம் குறித்த தெளிவோ தேவைப்பட்டால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த எண்ணைத் தொடர்புகொண்டு பேசலாம் என்று ஈரானின் தலைமை பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ஹார்முஸ் ஜலசந்தி இனி ஈரானிய ஏற்பாடுகளின் கீழ் மட்டுமே நிர்வகிக்கப்படும் என்றும், அது போருக்கு முந்தைய நிலைக்கு ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்றும் ஈரான் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. சர்வதேச கடல்சார் விதிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தாலும், அங்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் ஈரான் உறுதியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட நாட்களாக முடக்கப்பட்டிருந்த ஈரானின் 12 பில்லியன் டாலர் நிதியைப் பெறுவது மற்றும் எண்ணெய் மீதான தடைகளைத் தளர்த்துவது போன்ற விஷயங்களும் இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
சுமார் 80 நிமிடங்கள் நீடித்த இந்த அமெரிக்க-ஈரான் நாற்கரப் பேச்சுவார்த்தையின் முதல் சுற்று மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக அமெரிக்கத் தரப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அணுசக்தி ஆய்வாளர்களைத் தனது நாட்டிற்குள் அனுமதிக்க ஈரான் சம்மதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் இந்த முடிவானது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நிரந்தரமான மற்றும் சாத்தியமான இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்குக் காத்திரமான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
