அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஏழு வாரங்களாக நீடித்த போர் காரணமாக, உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு ஆதாரமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் இந்தியா உள்ளிட்ட எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு பெரும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து வர்த்தக கப்பல்களுக்காகவும் இந்த நீரிணை மீண்டும் திறக்கப்படுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.
நீரிணை திறப்புக்கு முதலில் நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப், அடுத்த சில நிமிடங்களிலேயே ஈரான் மீதான 100 சதவீத அமெரிக்க நடவடிக்கைகள் முடியும் வரை அமெரிக்க கடற்படையின் முடக்கம் தொடரும் எனப் பதிவிட்டார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா தங்களது கப்பல்களை முடக்கினால் மீண்டும் ஹார்முஸ் நீரிணை மூடப்படும் என்றும், இனி இங்கேயான அனைத்துப் போக்குவரத்துகளும் ஈரான் அரசின் அனுமதியோடு தான் நடக்கும் என்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாய் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இந்தப் போர் பதற்றத்தைத் தணிக்கவும் நிரந்தர உடன்பாட்டை எட்டவும் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் நடைபெறலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், இந்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை உலக நாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது.
மறுபுறம், லெபனானில் அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்த போர் நிறுத்தம் நிரந்தரமானது அல்ல என அதிகாரிகள் எச்சரித்துள்ள போதிலும், மக்கள் ஊர் திரும்பும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே சமயம், தங்கள் படைகள் லெபனானிலேயே தொடர்ந்து நிலைபெற்றிருக்கும் என்று இஸ்ரேல் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
