உலகெங்கும் ஆட்குறைப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் நிலவி வரும் சூழலில், சீனாவைச் சேர்ந்த மீடியாஸ்டார்ம் (Mediastorm) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுச் செய்தி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் பான், பயிற்சியில் இருக்கும் இன்டர்ன் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் புதிய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஊழியர்கள் தங்களுக்குப் பிடித்தமான மாடல்களைத் தேர்வு செய்துகொள்ள அனுமதித்ததோடு, சீன சட்டப்படி இந்தப் பரிசுகளுக்குச் செலுத்த வேண்டிய வரியையும் நிறுவனமே ஏற்றுக்கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டிம் பான் இத்தகைய தாராள மனப்பான்மையைக் காட்டுவது இது முதல் முறையல்ல. கடந்த 2024-ஆம் ஆண்டிலும் சுமார் 100 ஊழியர்களுக்கு ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஆப்பிள் வாட்ச் வழங்கி அவர் அதிரடி காட்டியிருந்தார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆப்பிள் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட ஊழியர் ஒருவர், “டிம் உண்மையிலேயே உலகின் சிறந்த முதலாளி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஒருபுறம் முன்னணி நிறுவனங்களே ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வரும் நிலையில், மீடியாஸ்டார்ம் நிறுவனத்தின் இந்தச் செயல் ஊழியர்களுக்கான அங்கீகாரத்தின் உச்சமாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதைய சூழல் இதற்கு முற்றிலும் நேர்மாறாக உள்ளது. குறிப்பாக, நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் 12,000 ரூபாய் சம்பளம் வாழ்வாதாரத்திற்குப் போதுமானதாக இல்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறி வாகனங்கள் தீயிடப்பட்ட சம்பவங்கள், இந்தியாவில் உள்ள அடித்தட்டு ஊழியர்களின் அவல நிலையைப் பறைசாற்றுகின்றன. ஒருபுறம் ஆடம்பரப் பரிசுகள், மறுபுறம் அடிப்படைத் தேவைக்கான போராட்டம் என உலகப் பொருளாதாரச் சூழலில் ஒரு மிகப்பெரிய இடைவெளி நிலவுவதை இது காட்டுகிறது.
இந்தச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்திய நெட்டிசன்கள் தங்கள் நிறுவன அனுபவங்களை ஆதங்கத்துடனும் கிண்டலாகவும் பகிர்ந்து வருகின்றனர். “சீனாவில் ஐபோன் வழங்குகிறார்கள், ஆனால் இங்கு போனஸ் கூட ஒழுங்காகக் கிடைப்பதில்லை” என்ற குரல்கள் பரவலாக ஒலிக்கின்றன. இந்தியாவில் நிலவும் வேலைநீக்க அச்சம் மற்றும் சம்பள உயர்வுப் போராட்டங்களுக்கு மத்தியில், இந்த ஐபோன் பரிசுச் செய்தி இந்திய ஊழியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் நிறுவனம் உங்களுக்கு வழங்கிய மறக்க முடியாத அல்லது வித்தியாசமான பரிசு எது? கமெண்டில் சொல்லுங்கள்!
