இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை?…. எம்.எல்.ஏ சீட்டுக்காக முட்டி மோதும் தவெக நிர்வாகிகள்… ஷாக்கில் முதல்வர் விஜய்….!

By Nanthini on ஆனி 27, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஒருவழியாகப் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையிலும், அரசியல் களம் அதற்குள்ளாகவே அடுத்த பரபரப்பிற்குத் தயாராகிவிட்டது. அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மற்றும் முதல்வர் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி பதவியைத் துறந்தது ஆகியவற்றால் பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம், விராலிமலை உள்ளிட்ட 6 தொகுதிகள் காலியாகியுள்ளன. விரைவில் வரவிருக்கும் இந்த இடைத்தேர்தலில், புதிதாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தவெக என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, மறுபுறம் தொகுதிகளைக் கைப்பற்ற தவெகவுக்குள்ளேயே நிர்வாகிகள் மத்தியில் கடுமையான முட்டல் மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன.

மதுராந்தகம் மற்றும் கொங்கு மண்டலத் தொகுதிகளில் இப்போதே சீட் ரேஸ் சூடுபிடித்துள்ளது. மதுராந்தகத்தில் கடந்த முறை நூலிழையில் தோற்ற விசிகவின் எழில் கேத்தரின் தவெக கூட்டணியில் மீண்டும் சீட் கேட்க, தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ மரகதமும் இதற்கு குறிவைத்துள்ளார். ஆனால், உள்ளூர் தவெக நிர்வாகிகளோ கட்சித் தொண்டர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதேபோல் பெருந்துறையில் அருணாசலம், மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ், முன்னாள் எம்.எல்.ஏ ஜெயகுமார் ஆகியோரிடையேயும், தாராபுரத்தில் கவுரி சித்ரா மற்றும் சத்யபாமா இடையேயும் நேரடிப் போட்டி நிலவி வருகிறது.

   

தென்மாவட்டமான அம்பாசமுத்திரத்திலும், புதுக்கோட்டையின் விராலிமலையிலும் நிலவரம் இன்னும் உச்சகட்ட டென்ஷனாக நகர்கிறது. அம்பாசமுத்திரத்தில் தவெகவுக்கு வந்த இசக்கி சுப்பையாவுக்கு தொகுதி நிலவரம் சாதகமாக இல்லாததால், மாவட்டச் செயலாளர்கள் ராஜகோபால் மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோர் சீட்டுக்காக முட்டி மோதுகின்றனர். விராலிமலையிலோ, அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணையவுள்ளதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என்று தவெக மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான முகமது பர்வேஸ் தலைமைக்கு முட்டுக்கட்டை போட்டு வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

இவ்வாறு நாலாபக்கமிருந்தும் வரும் அழுத்தங்களால் தவெக தலைமை தற்போது கடுமையான தர்மசங்கடத்தில் கையை பிசைந்து நிற்கிறது. கட்சியை நம்பி பதவிகளைத் துறந்துவிட்டு வந்த அதிமுக முன்னாள் புள்ளிகளுக்கு சீட் தராவிட்டால் அவர்கள் அதிருப்தி அடைவார்கள்; அதேநேரம், கட்சிக்காக உழைத்த அடிமட்டத் தொண்டர்களையும் உள்ளூர் நிர்வாகிகளையும் புறக்கணித்தால் அது கட்சியின் அடித்தளத்தையே சிதைத்துவிடும். இந்த இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் தவெக தலைமை, இந்த உள்கட்சி நெருக்கடியை எப்படிச் சமாளித்து, யாரை எப்படிச் சமாதானப்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.