தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிழல் உலகக் கும்பலின் பின்னணி குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே இந்திய கடலோரக் காவல்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில், சுமார் ரூ.3,000 கோடி மதிப்பிலான 526 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே உள்ளூர் மற்றும் சர்வதேச தொடர்புகள் அம்பலமாகி பூபாலன் உள்ளிட்டோர் பிடிபட்டனர்.
மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் மற்றும் செய்தி நிறுவனத் தகவல்களின்படி, இக்கடத்தலின் பின்னணியில் தாவூத் இப்ராஹிமின் ‘டி-கம்பெனி’ சிண்டிகேட்டுக்கு நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் கடற்பரப்பு வழியாக நடுக்கடலில் படகுகளை மாற்றி, தமிழ்நாடு மற்றும் இலங்கையை மையமாக வைத்து சர்வதேச சந்தைக்கு போதைப்பொருட்களை நகர்த்தும் பாரிய சதித்திட்டம் இதில் தீட்டப்பட்டிருந்தது.
அத்துடன், வெறும் போதைப்பொருள் புழக்கத்துடன் மட்டும் நிற்காமல், இந்த கடத்தல் மூலம் கிடைக்கும் கணக்கில் வராத பெருந்தொகையைக் கொண்டு சட்டவிரோத ஆயுதங்களை வாங்கிப் பதுக்கும் திட்டமும், பயங்கரவாத வலைப்பின்னல்களுக்கு நிதியளிக்கும் சூழ்ச்சியும் இதில் அடங்கியிருப்பதாக புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. இது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், தொடர்புடைய சர்வதேச நெட்வொர்க் மற்றும் உள்ளூர் அரசியல் தொடர்புகள் குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.
