என்ன காரணமா இருக்கும்?… ஒரு போன் கால்… உச்சக்கட்ட சந்தேகம்… மனைவிக்கு தீ வைத்த கணவன்… வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

By Gayathri on கார்த்திகை 6, 2026

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவருக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்குத் திரும்பிய அவர், தனது மனைவி சோனம் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகித்துள்ளார். அண்மையில் மனைவி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை நேரில் பார்த்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தேகத்தின் உச்சக்கட்டமாக, அதிகாலை நேரத்தில் சுக்பீர் சிங் தனது மனைவியை நாற்காலியில் கட்டிப்போட்டு, அவர் மீது பெட்ரோல் ஊற்றி கொடூரமாக தீ வைத்துள்ளார். இதனால் அந்தப் பெண் வலியால் அலறித் துடிக்க, வீடு முழுவதும் தீ மளமளவெனப் பரவியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரள்வதற்குள் தீயின் வீரியம் அதிகரித்ததால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

   

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீயை அணைத்த போதிலும், சோனம் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே, தன் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிய கணவன் சுக்பீர் சிங்கை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.