ஹரியானா மாநிலம் குருகிராமில் காரை வழிமறித்து தீபாவளிப் பரிசு கேட்டு மிரட்டிய ஊர்க்காவல் படை வீரர் மீது போலீஸார் பணப்பறிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
விகாஸ் தயாள் என்ற டிஜிட்டல் கிரியேட்டர் தனது சகோதரியுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரர் காரை நிறுத்தியுள்ளார். ஓட்டுநரிடம் நலம் விசாரித்த அந்த வீரர், தீபாவளிப் பரிசு தருமாறு கேட்டுள்ளார். தன்னிடம் பணப்பை இல்லை என்றும், ஆன்லைனில் பணம் செலுத்தவா என்றும் ஓட்டுநர் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார். காரில் இருந்த சாதாரண தீபாவளிப் பரிசுப் பெட்டியைக் கொடுத்தபோதும், திருப்தியடையாத அந்த வீரர் காரின் உள்ளே கையை விட்டு வேறு ஏதேனும் நல்ல பரிசு இருக்கிறதா எனத் தேடி எடுத்துச் சென்றுள்ளார்.
https://www.instagram.com/reel/DfcMMZJC4IE/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ இணையத்தில் பரவி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து குருகிராம் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வீடியோவில் இருக்கும் நபர் வழக்கமான போலீஸ் அதிகாரி அல்ல, அவர் ஒரு ஊர்க்காவல் படை வீரர் என்று தெளிவுபடுத்திய போலீஸார், அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் பணப்பறிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இதுபோன்ற அத்துமீறல்களுக்குத் தங்களது துறையில் சகிப்புத்தன்மை கிடையாது என்றும், அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குருகிராம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
