“உன் புருஷன் போட்டோ எதுக்கு ஸ்டோரி போட்ட”…. மனைவியை காரில் கடத்திய காதலன்…. காரில் நடந்த கொடூரம்…. சென்னையை உலுக்கிய சம்பவம்…!

By Nanthini on பங்குனி 26, 2026

Spread the love

சென்னை தாம்பரம் அடுத்த மேடவாக்கம் சின்மயா நகரைச் சேர்ந்த 36 வயது பெண் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் பள்ளி முதல்வராக பணியாற்றி வரும் இவருக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் வாயிலாக மேடவாக்கம் பெல் நகரைச் சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் ஹரிகிருஷ்ணன் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊர் திரும்பிய ஹரிகிருஷ்ணனுடன், ஷாலினி நண்பராகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ஷாலினி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன், தொலைபேசி வாயிலாக ஷாலினியைத் தொடர்பு கொண்டு, அந்தப் புகைப்படத்தை உடனடியாக நீக்குமாறு கூறி ஆபாசமாகத் திட்டியுள்ளார். “என் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வைப்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?” என ஷாலினி தட்டிக் கேட்கவே, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் தொலைபேசியுடன் நிற்காமல், நேரில் வன்முறையாக வெடித்துள்ளது.

   

வெறி கொண்ட ஹரிகிருஷ்ணன், ஷாலினியின் வீட்டிற்கே சென்று அவரிடம் பேச வேண்டும் எனக் கூறி வலுக்கட்டாயமாகத் தனது காரில் ஏற்றியுள்ளார். கார் கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஷாலினியின் கழுத்தை நெரித்து, முகத்தில் தாக்கிய ஹரிகிருஷ்ணன், அவருக்குப் பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய ஷாலினி அலறவே, சத்தம் கேட்டு அவரது தந்தை ஓடி வருவதைக் கண்ட ஹரிகிருஷ்ணன், அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டார்.

   

இச்சம்பவம் குறித்து ஷாலினி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹரிகிருஷ்ணனை அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமூக வலைதள நட்பு எல்லை மீறி வன்முறையில் முடிந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.