2026 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தல் எதிர்நோக்கி இந்த முறை பொங்கல் பரிசு குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. சில வருடங்களாக திமுக அரசு பொங்கல் பரிசோடு ரொக்க பணம் வழங்குவதை நிறுத்தியிருந்தது. இம்முறை தேர்தல் ஆண்டாக இருப்பதால் இந்த முறை ரொக்க பணம் சேர்த்து வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புஎழுந்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு வருடம் தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வரவிருக்கும் 2026 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்போடு களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு பானையும், புதிய அடுப்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. புது பானையில் பொங்கல் இடுவது தான் நம்முடைய பாரம்பரியம். எனவே அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்போடு களிமண்ணால் ஆன புதிய பானையும், புதிய அடுப்பும் அரசு கொள்முதல் செய்து விலையில்லாமல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
