தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ. 74 லட்சம் மோசடி செய்துள்ளனர். உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளைத் தெரியும் என ஆசைவார்த்தை கூறி, சாந்தி என்பவரது மகனுக்கு வேலை வாங்கித் தர ரூ. 50 லட்சம் வாங்கியுள்ளனர். இதேபோல் மேலும் நான்கு நபர்களிடம் தலா ரூ. 4 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை வசூலித்து ஏமாற்றியுள்ளனர்.
பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும் வேலை கிடைக்காததால் பாதிக்கப்பட்ட சாந்தி, தேனி மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், தேனி குற்றப்பிரிவு போலீசார் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அந்தத் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது சேலம் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் சண்முகசுந்தரமும் அவரது மனைவியும் தலைமறைவாக உள்ளதால், அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
