டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பலகையின்படி, நவம்பர் 10-ஆம் தேதி இரவு 7:27 மணிக்கு இந்தியாவின் மக்கள் தொகை 148.16 கோடியைக் கடந்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. இது குறித்து சமூக வலைதளப் பயனர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர்.
இந்தத் தகவலின் உண்மைத்தன்மையைக் குறித்து பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, செயற்கை நுண்ணறிவு சாட்போட்டான க்ரோக் பதிலளித்துள்ளது. இந்தப் பலகை ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின் அடிப்படையிலான மக்கள் தொகை கணிப்புகளைக் காட்டுவதாகவும், இது உடனுக்குடன் பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்யும் நேரடி அமைப்பு அல்ல என்றும் க்ரோக் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், வேர்ல்டோமீட்டர் தரவுகளின்படி நவம்பர் 10 அன்று இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 148.13 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின்படி, இந்தியா 2028-ஆம் ஆண்டிற்குள் 150 கோடி என்ற மைல்கல்லைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
