உலக அளவில் மிகவும் ஆபத்தான இதுவரை முற்றிலும் சரி செய்ய முடியாத ஒரு நோயாக இருப்பதுதான் புற்றுநோய். இந்த புற்றுநோயை தடுப்பதற்கு உலகில் விஞ்ஞானிகள் பலவித மருந்துகளை கண்டுபிடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் நோயுடன் வாழக்கூடிய மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் ஒரு அறிக்கையில் வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு அவர்கள் வாழ்நாளில் புற்றுநோய் வரக்கூடிய அபாயம் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 14,61,4927 பேர் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாகவும் கடந்த ஆண்டுகளை விட தற்போது 12.8% இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிக அளவில் இருந்தாலும் கூட உலகளாவிய மரபணு ஆய்வுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த நோய் குறைவாக இருப்பதாகவே கருதப்படுகிறது. புற்று நோய்களுக்கான முக்கிய காரணிகளை கண்டறியக்கூடிய சாதனங்களோ மருந்து வகைகளோ இல்லை என்று தான் கூறுகிறார்கள். அதனால் இந்தியாவில் பல்வேறு புற்று நோய்களுக்கு மரபணு ரீதியாக இருந்து வரும் இடைவெளியை நிரப்பும் வகையில் புற்று நோய் மரபணு திட்டத்தை 2020 ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸ் தொடங்கியது.
இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 480 மார்பக புற்றுநோய் நோயாளிகளின் திசு மாதிரிகளில் இருந்து 960 முழு எக்சம் வரிசை முறை சேகரிக்கும் பணி தற்போது நிறைவடைந்து இருக்கிறது. இந்த மரபணு திரிபுகளை வைத்து புற்றுநோய் மரபணு வரிசை உருவாக்கத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள். இந்த பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம் இந்தியாவிற்கு மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருக்கும் ஆராய்ச்சிகளுக்கு பயனளிக்கும் என்று ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி காமகோடி கூறியிருக்கிறார்.

இந்த மரபணு வரைபடம் மூலம் கேன்சர் என்ற கொடிய நோய் தாக்குவதற்கான காரணங்கள் என்ன என்பவற்றை ஆழமான நுண்ணறிவு மூலம் கண்டுபிடித்து அதை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்தக்கூடிய மருந்துகளை கண்டுபிடிக்க இது பெரிதளவு உதவும் என்று கூறியிருக்கிறார் பேராசிரியர் காமகோடி. இந்தியாவில் முதல் முறையாக ஐஐடி மெட்ராஸில் தான் இந்த மரபணு வரைபடத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு பெருமை ஏற்பட்டு இருக்கிறது.
