கவுகாத்தி ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஏ.எஸ்.எஸ்.டி நிறுவனங்களைச் சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர்கள், ‘ஆர்.கே-251’ என்ற புதிய புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். பொதுவாக அளிக்கப்படும் கீமோதெரபி சிகிச்சைகள் புற்றுநோய் செல்களுடன் சேர்த்து நல்ல செல்களையும் அழித்து கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால், இந்த அதிநவீன ஸ்மார்ட் மருந்தானது, உடலின் ஆரோக்கியமான திசுக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல், புற்றுநோய் செல்களை மட்டுமே துல்லியமாகக் கண்டறிந்து அழிக்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து புற்றுநோய் செல்களில் அதிகளவில் காணப்படும் ‘ரியாக்டிவ் ஆக்சிஜன் ஸ்பீசிஸ்’ என்ற மூலக்கூறுகளின் அளவை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. ஆரோக்கியமான செல்களில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அமைதியாக இருக்கும் இந்த மருந்து, புற்றுநோய் செல்களுக்குள் சென்றவுடன் வீரியமடைந்து ‘என்.பி.டி.ஹெச்.இ.எக்ஸ்’ என்ற கூட்டுப்பொருளை வெளியிடுகிறது. இதன் மூலம், புற்றுநோய் செல்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும் உயிர்வாழவும் பயன்படுத்தும் புரதங்கள் முடக்கப்பட்டு, அவை முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன.
குணப்படுத்த மிகவும் கடினமான ‘ட்ரிபிள் நெகட்டிவ் மார்பகப் புற்றுநோய்’ செல்களில் நடத்தப்பட்ட ஆய்வக மற்றும் விலங்குப் பரிசோதனைகளில் இது எவ்வித நச்சுத்தன்மையுமின்றி பாதுகாப்பாகச் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மருந்து தற்போது முதற்கட்ட ஆய்வகச் சோதனையில் மட்டுமே உள்ளதால், மனிதர்களிடம் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே இது முழுமையான பயன்பாட்டிற்கு வரும். எதிர்காலத்தில் இது வழக்கமான கீமோதெரபியோடு இணைந்து செயல்படும் ஒரு சிறந்த துணைச் சிகிச்சையாக அமையும் என மருத்துவர்கள் நம்புகின்றனர்.
