இந்திய ரயில்வே தனது பயணிகளுக்காக ‘ரயில் ஒன்’ எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலி மூலம் முன்பதிவு இல்லாத சாதாரண டிக்கெட்டுகளை எடுக்கும்போது 3 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஜனவரி 14) முதல் அமலுக்கு வரும் இந்த அதிரடி சலுகை வரும் ஜூலை 14-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
குறிப்பாக, ரயில்வே வாலட் மூலம் பணம் செலுத்துவோருக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 3 சதவீத கேஷ்பேக் சலுகையுடன் சேர்த்து, இந்த 3 சதவீத கூடுதல் தள்ளுபடியும் கிடைப்பதால் பயணிகள் இரட்டிப்புப் பலன் அடையலாம். ஒரே செயலியில் முன்பதிவு டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் என அனைத்தையும் பெறும் வகையில் இந்த ரயில் ஒன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் டிக்கெட் எடுப்பது மட்டுமின்றி ரயிலின் இருப்பிடம், பெட்டிகளின் வரிசை, பிஎன்ஆர் நிலை போன்ற தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். மேலும், உணவு ஆர்டர் செய்தல் மற்றும் டாக்ஸி முன்பதிவு போன்ற கூடுதல் வசதிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தச் சலுகை ஆன்லைன் செயலியில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ரயில் நிலைய கவுண்டர்களில் நேரடியாக டிக்கெட் எடுப்பவர்களுக்குப் பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
