இத்தாலி நாட்டின் உணவகம் ஒன்றில், இந்தியாவைப் பற்றி அவதூறாகப் பேசிய வங்காளதேசத்தைச் சேர்ந்த உணவக ஊழியரை (வொயிட்டர்), இந்தியப் பெண்கள் அங்கேயே தடுத்து நிறுத்தி மன்னிப்புக் கேட்க வைத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. குஷி துபே என்ற இந்திய இன்ஃப்ளூயன்ஸர் (Influencer) தனது தோழிகளுடன் இத்தாலிக்குச் சுற்றுலா சென்றபோது இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்த உணவகத்தில் சாப்பிட்டு முடித்த பிறகு பில் செலுத்துவது தொடர்பாக இவர்களுக்கும் அங்கிருந்த ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஹுசைன் என்ற வங்காளதேச வம்சாவளியைச் சேர்ந்த ஊழியர், இந்தியப் பெண்களிடம் மிகவும் அநாகரிகமாக நடந்துகொண்டதோடு, இந்தியா மற்றும் இந்தியர்களின் தேசியத்தை இழிவுபடுத்தும் வகையில் அவதூறான கருத்துக்களைக் கூறியுள்ளார். தன் நாட்டைப் பற்றி தவறாகப் பேசியதைக் கேட்டு ஆத்திரமடைந்த குஷி துபேயும் அவரது தோழிகளும், உடனடியாக அந்த ஊழியருக்கு அங்கேயே தகுந்த பாடம் புகட்ட முடிவு செய்தனர்.
https://www.instagram.com/reel/DZ7dxT0SbPn/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
நிலைமை மோசமானதைத் தொடர்ந்து அங்கு உள்ளூர் போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். போலீசார் முன்னிலையிலும் சற்றும் பின்வாங்காத அந்த இந்தியப் பெண்கள், “இந்தியாவை இழிவுபடுத்தியதற்காக இப்போதே மன்னிப்புக் கேள்” என்று அந்த ஊழியருக்குக் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். முதலில் மன்னிப்புக் கேட்கத் தயங்கிய அந்த ஊழியர், பெண்களின் உறுதியான மற்றும் ஆக்ரோஷமான எதிர்ப்பைக் கண்டு வேறு வழியின்றி நடுங்கிப்போய், போலீசார் முன்பாகவே பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். இந்த தைரியமான வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், வெளிநாட்டிலும் தாய்நாட்டின் பெருமையைக் காப்பாற்றிய அந்த இந்தியப் பெண்களை “பாரத நாட்டு சிங்கப் பெண்கள்” என்று சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
