“பகீர்… நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் மரண வலை.. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பின்னணியில் நடந்த… புனே தொழிலதிபர் மகன் கொடூர கொலை…!!”

By Swetha on ஆனி 24, 2026

Spread the love

புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது தந்தை தேவி சந்த் அகர்வால் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேதனுக்கும் சியா கோயல் என்ற பெண்ணுக்கும் பிப்ரவரி 2026-ல் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு சியாவின் நடத்தையில் கேதனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சியாவின் போன் எப்போதும் பிஸியாகவே இருந்ததும், அவள் பேசும்போதெல்லாம் ‘சேத்தன் சவுத்ரி’ என்ற பெயரையே அடிக்கடி குறிப்பிட்டதும் கேதனுக்கு கவலையை அளித்துள்ளது. சியாவின் பின்னணி குறித்து சரியாக விசாரிக்கப்பட்டதா என்று கேதன் தன் பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால், நெருங்கிய உறவினர்கள் மூலம் வந்த வரன் என்பதால் பெற்றோர் சியாவை சந்தேகிக்க வேண்டாம் என்று கேதனை சமாதானப்படுத்தியுள்ளனர்.

சியா திட்டமிட்டே கேதனை லோஹகாட் கோட்டைக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சியா தொடர்ந்து லோஹகாட் கோட்டைக்கு செல்லலாம் என கேதனை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு முன்னதாக மே 31 மற்றும் ஜூன் 14 ஆகிய தேதிகளிலும் அவர்கள் அங்கு சென்றுள்ளனர். ஜூன் 18 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்று கூறி, கேதனை மீண்டும் அக்கோட்டைக்கு வருமாறு சியா பிடிவாதம் பிடித்துள்ளார். கேதனின் தாய் இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், சியாவின் அழுகை மற்றும் வற்புறுத்தலால் கேதன் ஜூன் 18 காலை தனது பைக்கில் சியாவை அழைத்துக்கொண்டு லோஹகாட் கோட்டைக்குச் சென்றுள்ளார். அதுவே அவனது இறுதிப் பயணமாக மாறியுள்ளது.

   

அவர்கள் சென்ற சில மணிநேரங்களிலேயே, கேதன் கோட்டையின் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதாக சியாவின் தாய் கேதனின் குடும்பத்தினருக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். மீட்கப்பட்ட கேதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். முதலில் இது ஒரு சாதாரண விபத்தாகக் கருதப்பட்டாலும், இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு குடும்பத்தினரின் சந்தேகம் வலுவடைந்தது. தற்போது புனே போலீசார் மொபைல் தரவுகள் , சிசிடிவி காட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் இருப்பிட வரலாறு ஆகியவற்றைக் கொண்டு அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சியா தனது காதலன் சேத்தனுடன் சேர்ந்து கேதனை திட்டமிட்டு கொலை செய்திருப்பது அம்பலமாகியுள்ள நிலையில், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல போலீசார் தயாராகி வருகின்றனர்.