பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான ‘லஷ்கர்-இ-தொய்பா’ (LeT), கடந்த 1980-களில் சோவியத்-ஆப்கான் போர்க் காலத்தில் தொடங்கப்பட்டதாகும். ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேறிய பிறகு, இந்த அமைப்பு இந்தியாவை இலக்காகக் கொண்டு தனது சதித்திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியது. இந்தியாவில் நடைபெற்ற பல கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இயங்கிய இந்த அமைப்புக்கு, பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI) நிதி மற்றும் புகலிடம் அளித்து ஆதரவு வழங்கி வருகிறது. இதனால் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் லஷ்கர்-இ-தொய்பாவை பயங்கரவாத இயக்கமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான ரிஸ்வான் ஹனீஃப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பேசிய அவர், “கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர், கராச்சி, ராவல்பிண்டி, முசாபராபாத் மற்றும் ராவலகோட் போன்ற நகரங்களில் இயங்கி வந்த நம் இயக்கத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் காஷ்மீரிலும் நம்மைச் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இயங்க விடாமல் இந்திய உளவு அமைப்புகள் முடக்கி வருகின்றன” என்று புலம்பிக் கதறியுள்ளார்.
மேலும், அந்த உரையாடலில் பிற மதத்தினருக்கு எதிரான வெறுப்புணர்வையும், வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, லஷ்கர்-இ-தொய்பாவின் முதன்மை நோக்கமே மாற்று மதத்தினரை இலக்கு வைப்பதுதான் என்பதைப் போன்ற சர்ச்சைக்குரிய உரையாடல்களையும் அவர் பேசியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள தங்கள் ஆதரவுத் தளங்கள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டு வருவதையும், தங்களின் தலைவர்கள் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்படுவதையும் சுட்டிக்காட்டி, இயக்கத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் நடக்கும் இந்தத் தொடர் கொலைகளுக்கு இந்திய உளவுத்துறை முகவர்களே காரணம் என்று பாகிஸ்தான் அரசு அவ்வப்போது குற்றம்சாட்டி வருகிறது. இருப்பினும், இந்த வீண் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. பாகிஸ்தானின் நிழல் ஆதரவோடு இயங்கி வந்த பயங்கரவாதக் குழுக்கள், தற்போது தங்களின் சொந்த மண்ணிலேயே பாதுகாப்பு இன்றித் தவிப்பதையும், உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பால் அவர்களின் பின்னடைவு தீவிரமடைந்துள்ளதையும் இந்த வைரல் வீடியோ வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
