“இனி டேட்டாவுக்கும் வரி”… இன்டர்நெட் பயன்படுத்துவோருக்கு ஷாக் நியூஸ்…. மத்திய அரசின் புதிய திட்டம்….!

By Nanthini on பங்குனி 12, 2026

Spread the love

இந்தியாவில் அதிகரித்து வரும் இணைய பயன்பாடு மற்றும் தொலைத்தொடர்பு துறையின் வருவாயை மேம்படுத்தும் நோக்கில், மொபைல் டேட்டா பயன்பாட்டிற்கு பிரத்யேகமான வரி விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தொலைத்தொடர்புத் துறை ஆய்வுக் கூட்டத்தில் இது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் மயம் காரணமாக தனிநபர் டேட்டா பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இந்த புதிய வரித் திட்டம் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த வரி விதிப்பு தொடர்பான விரிவான அறிக்கையைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு தொலைத்தொடர்புத் துறைக்கு (DoT) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, வருவாய் ஈட்டும் கட்டமைப்பை உருவாக்குவதோடு, குழந்தைகளிடையே டிஜிட்டல் போதை மற்றும் அதிகப்படியான டேட்டா பயன்பாட்டைக் குறைப்பதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கி, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2025 நிதியாண்டின் புள்ளிவிவரங்களின்படி, ஒரு ஜிபி டேட்டாவிற்கு ஒரு ரூபாய் வரி விதித்தாலே அரசாங்கத்திற்கு சுமார் 22,900 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது.

   

ஏற்கனவே மொபைல் ரீசார்ஜ்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் சூழலில், தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய வரி பயனர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏலம் மற்றும் உரிமக் கட்டணங்களைத் தாண்டி, தொலைத்தொடர்புத் துறையின் வருவாயை விரிவுபடுத்த அரசு எடுக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. அரசு தரப்பில் குழந்தைகளின் நலம் மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதை ஒரு காரணமாகக் கூறினாலும், இது பொதுமக்களின் இணையப் பயன்பாட்டுச் செலவை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

   

இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மலிவு விலையில் தரவு நுகர்வில் உலகளவில் முன்னணியில் உள்ள இந்தியாவின் நிலையை இது பாதிக்கும் என்றும், தொழில்நுட்பப் புதுமைகளுக்குத் தடையாக அமையும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளைக் காக்க வேண்டுமானால் திரை நேரத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற பிற வழிகளை நாட வேண்டுமே தவிர, டேட்டா மீது வரி விதிப்பது தவறான முன்னுதாரணமாகும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த வரி அமலுக்கு வருமா அல்லது வல்லுநர்களின் எச்சரிக்கையை அரசு ஏற்குமா என்பதை செப்டம்பர் மாதத்திற்குப் பிறகுதான் உறுதியாக அறிய முடியும்.