இந்தியர்களுக்கு தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது உணர்ச்சிகளோடும் பாதுகாப்போடும் பின்னிப்பிணைந்த ஒரு பெரும் சொத்து. தற்போதைய நிலவரப்படி, இந்தியக் குடும்பங்களிடம் சுமார் 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் முடங்கிக் கிடப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. இது உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் கையிருப்பை விட அதிகம் என்பது ஆச்சரியமான உண்மை. அமெரிக்கா மற்றும் சீனாவின் ஜிடிபியைத் தவிர்த்துப் பார்த்தால், உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தை விட இந்திய வீட்டுத் தங்கத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து நிற்கிறது.
மத்திய அரசின் ‘விக்சித் பாரத் 2047’ (வளர்ந்த இந்தியா) இலக்கை அடைவதில் இந்தத் தங்கம் ஒரு துருப்புச் சீட்டாகக் கருதப்படுகிறது. வீடுகளில் உள்ள தங்கத்தில் வெறும் 2 சதவீதத்தை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் முறையான நிதிச் சந்தைக்குள் (Financial Assets) கொண்டு வர முடிந்தால், 2047-க்குள் இந்தியாவின் ஜிடிபி கூடுதலாக 7.5 டிரில்லியன் டாலர் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் 2047-ல் கணிக்கப்பட்டுள்ள 34 டிரில்லியன் டாலர் ஜிடிபி இலக்கானது, சுமார் 41.5 டிரில்லியன் டாலராக எகிறிப் பாயும் வல்லமை கொண்டது.
தங்கத்தை வெறும் பீரோவில் பூட்டி வைக்காமல், தங்க சேமிப்புத் திட்டங்கள், தங்கப் பத்திரங்கள் மற்றும் முறையான தங்கக் கடன்கள் (Gold Loans) மூலம் புழக்கத்திற்கு விடுவது அவசியமாகிறது. ஏற்கனவே இந்தியாவில் தங்கக் கடன் துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது; 2025-26 நிதியாண்டின் முதல் பாதியிலேயே பல லட்சம் கோடி ரூபாய் தங்கக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய நிதிச் சுழற்சி, நாட்டின் உற்பத்தித் துறை, உட்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைக்குத் தேவையான மாபெரும் முதலீட்டு ஆதாரமாகத் திகழும்.
தங்கம் பணமாக மாறிச் சந்தையில் சுழலும் போது, அது நாட்டின் நுகர்வுத் திறனை (Consumption) அதிகரித்து, புதிய தொழிற்சாலைகள் உருவாகவும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகவும் வழிவகுக்கும். “ஆபத்துக்கு உதவும் தங்கம்” என்ற பழமொழிக்கு ஏற்ப, தனிமனிதத் தேவைகளைத் தாண்டி, தேசத்தின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு ‘உயிருள்ள சொத்தாக’ தங்கம் மாற வேண்டிய தருணம் இது. பீரோவில் தூங்கும் தங்கத்தைத் தட்டி எழுப்புவதன் மூலம், இந்தியாவின் பொற்காலத்தை நாம் நிச்சயம் எட்ட முடியும்.
