திண்டுக்கல் சட்டசபை தொகுதியின் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், தேர்தல் பிரசாரத்தின் போது ஜாதியை குறிப்பிட்டுப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காப்பிலியப்பட்டியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது பேசிய அவர், அங்குள்ள மக்கள் ‘ஒக்கலிகர் கவுண்டர்கள்’ என்றும், அடுத்த முதலமைச்சராக வரப்போகும் எடப்பாடி பழனிசாமி ‘கொங்கு வேளாளர் கவுண்டர்’ என்றும் குறிப்பிட்டு, ஒரு கவுண்டர் தமிழகத்தை ஆளப்போவது மகிழ்ச்சியான செய்தி எனப் பேசியுள்ளார்.
தற்போது திண்டுக்கல் தொகுதியில் போட்டி மிகவும் கடுமையாக உள்ளது. அதிமுகவின் மூத்த தலைவரான திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து, திமுக சார்பில் தற்போதைய அமைச்சர் ஐ.பி. பெரியசாமியின் மகனும், பழனி தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஐ.பி. செந்தில்குமார் களமிறங்கியுள்ளார். இருவருமே தொகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் நிலையில், சீனிவாசனின் இந்த ஜாதி ரீதியிலான பேச்சு சமூக வலைதளங்களில் வீடியோவாகப் பரவி விவாதங்களை கிளப்பியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, எந்தவொரு வேட்பாளரும் ஜாதி, மதம் அல்லது இன ரீதியாக வாக்குகளைக் கோருவது கடுமையான தேர்தல் விதிமீறலாகும். “ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு பழனிசாமி ஆட்சி செய்தார்” என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, மற்றொருபுறம் ஜாதி அடையாளத்தை முன்னிறுத்தி அவர் பேசியிருப்பது முரணாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஸ்டாலினின் ஆட்சியை மாற்ற இரட்டை இலைக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தாலும், ஜாதியைத் தொட்டுப் பேசியது அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜாதி உணர்வைத் தூண்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திண்டுக்கல் சீனிவாசன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் புகார் அளித்துள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த சர்ச்சை பேச்சு திண்டுக்கல் தொகுதி தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
