2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கதிரவன், வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், அவை தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியமானவை என்றும் கதிரவன் புகழாரம் சூட்டினார். “எடப்பாடியார் ஒரு அருமையான தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளார்; மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அவர் அளித்துள்ள வாக்குறுதிகள் நிச்சயமாக அவரை மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கும்” என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார். இந்த ஆதரவு அறிவிப்பு, தென் மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற பார்வர்டு பிளாக் கட்சியின் வாக்கு வங்கியை அதிமுக பக்கம் திருப்ப உதவும் என்பதால், அரசியல் வட்டாரத்தில் இது ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
