மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, இந்தியாவுக்கு நிம்மதியளிக்கும் வகையில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் நீடித்து வந்தது. குறிப்பாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தற்காலிகமாக முடக்கியதால், இந்தியாவுக்கு எரிவாயு ஏற்றி வந்த கப்பல்கள் நடுவழியில் சிக்கின. இந்தச் சூழலில், இந்திய அரசின் தீவிர ராஜதந்திர முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளது.
சமீபத்தில் ஐஎன்எஸ் சிவாலிக் மற்றும் ஐஎன்எஸ் நந்தா தேவி ஆகிய போர்க்கப்பல்களின் பாதுகாப்புடன் சுமார் 92,712 டன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இந்திய கப்பல்கள் குஜராத் துறைமுகத்தை வந்தடைந்தன. இதனைத் தொடர்ந்து, தற்போது மேலும் இரண்டு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்கத் தொடங்கியுள்ளன. ‘கேஸ் விநியோகம்’ மற்றும் ‘ஜாக் வசந்த்’ ஆகிய பெயருடைய இந்த இரு கப்பல்களும் பாரசீக வளைகுடா பகுதியில் இருந்து சமையல் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இந்தியா நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த இரு கப்பல்களும் ஒன்றுக்கொன்று மிக அருகிலேயே பயணம் செய்து வருகின்றன. கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, இவை தற்போது லராக் மற்றும் கேஷ்ம் தீவுகளுக்கு இடையிலான கடல் பகுதியில் அடையாளம் தெளிவாகத் தெரியும் வகையில் பயணித்து வருகின்றன. போர்ச் சூழலில் மற்ற நாடுகளின் கப்பல்கள் தவித்து வரும் நிலையில், இந்தியக் கப்பல்கள் தடையின்றிப் பயணிப்பது இந்தியாவின் சர்வதேச உறவு மற்றும் பாதுகாப்பு வியூகத்திற்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்குத் தேவையான எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்திய அரசு தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த சில நாட்களில் மேலும் பல இந்தியக் கப்பல்கள் இந்த நீரிணையை கடந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உள்நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. உலக நாடுகளே உற்று நோக்கும் இந்த இக்கட்டான நேரத்தில், இந்திய கப்பல்கள் பாதுகாப்பாகத் திரும்புவது நாட்டுக்கு முக்கியமான செய்தியாக அமைந்துள்ளது.
