சமூக விரோதி திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் இமான் அண்ணாச்சி நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
நடிகர் விஜய்யின் திரைப்படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் குதூகலம் அடைந்துவிடுவார்கள். திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், ட்ரைலர், பாடல்கள் என்று அனைத்துமே சமூக வலைதளங்களில் அதிக பார்வைகளை பெற்று சாதனை படைப்பதை கொண்டாடி மகிழ்வார்கள்.
அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும், நடிகர் விஜயின் திரைப்படங்கள் வெளியானால், அதில் சர்ச்சைகளுக்கும் இடமில்லாமல் இல்லை.

அந்த வகையில், லியோ திரைப்படத்தின் ட்ரைலரில் புகைப்பிடிப்பது மற்றும் கெட்ட வார்த்தை இடம்பெற்றிருப்பதை பலரும் விமர்சித்தனர். இந்நிலையில், நடிகர் ப்ரஜின் நடித்துள்ள சமூக விரோதி என்ற திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் இமான் அண்ணாச்சி, நடிகர் ப்ரஜினை வருங்கால அஜித் என்று புகழ்ந்து பேசினார்.
மேலும், புகைப்பிடிப்பது மற்றும் கெட்ட வார்த்தையில் பேசுவது இரண்டும் இருந்தால், ஒரு திரைப்படம் வெற்றியடைந்துவிடும். அந்த இரண்டுமே இத்திரைப்படத்தில் (சமூக விரோதி) இடம்பெற்றிருக்கிறது. எனவே இத்திரைப்படம் வெற்றியடைந்துவிடும் என்று நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தை மறைமுகமாக சாடி பேசியுள்ளார்.

